

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையம் சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கருப்பத்தூரை சேர்ந்த மாணிக்கம் (வயது 28), குளித்தலை தாலுகா, கருங்காலப்பள்ளியை சேர்ந்த பாரதிதாசன் (23) என்பது தெரிய வந்தது.
மேலும், கடந்த 9-ந்தேதி குஜிலியம்பாறை அருகே நல்லாக்கவுண்டன்பட்டி பிரிவு சாலையில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜலட்சுமி (54) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 3 பவுன் நகையும் மீட்கப்பட்டது.