

திண்டுக்கல்,
இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 26). அவருடைய கணவர் ஜெயசீலன் நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அக்கம்பக்கத்தினர் காளியம்மாளை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்ற போது, அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் காளியம்மாள் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், காளியம்மாள் கொலை செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அவரது கணவரின் செல் போன் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. இதனால் சந்தேகித்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெயசீலனை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.