

சென்னை,
இயக்குநர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் மறைவிற்கு இயக்குநர் பேரரசு உருக்கமாகப் புகழஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலைக் குடும்பத்தில் இரு வாரங்களுக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு பெரும் பேரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் பேரரசு தெரிவித்தார். பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது சீடரான பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலத்திலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டிக்கொடுத்தவர் பாக்யராஜ் மட்டுமே என்றும், தமிழ் சினிமாவில் ரூ.1 கோடி வசூலை எட்டியது பாக்யராஜ் படம் தான் என்றும் நினைவுகூர்ந்தார்.
பாக்யராஜின் படங்களைப் பார்த்துத்தான் தானும் ஒரு இயக்குநராக வேண்டும் என்று சென்னைக்கு வந்ததாகவும், பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் திரையுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்றும் உருக்கமாகப் புகழஞ்சலி செலுத்தினார்.
அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இயக்குநர் பாக்கியராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.