

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த நவம்பர் 16-ந் தேதி இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவருடைய மனைவி கம்சலா (32), அரூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், நடராஜன், இவருடைய மனைவி லலிதா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதில் மாற்றுத்திறனாளி பிரபாகரன், கம்சலா, மதிவாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நடராஜன், அவருடைய மனைவி லலிதா ஆகியோரை தேடி வருகின்றனர். கடந்த 11-ந் தேதி பிரபாகரன் நாமக்கல் கிளை சிறையிலும், கம்சலா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி கைதி சாவு
இந்தநிலையில் பிரபாகரனுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 12-ந் தேதி நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
அவர்கள், போலீசார் அடித்ததால்தான் பிரபாகரன் இறந்ததாக கூறி ஆஸ்பத்திரி எதிரே உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பிரபாகரனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரபாகரன் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்தனர்.
நீதிபதி விசாரணை
பிரபாகரன் மரணம் குறித்து விசாரணை நடத்த நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) நஜ்மல்ஹோடாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் சேலம் குற்றவியல் நீதிபதி கலைவாணி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரித்தார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பூங்கொடி மற்றும் ஏட்டு குழந்தைவேலு ஆகியோரை நேற்று டி.ஐ.ஜி. நஜ்மல்ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த தகவல் பிரபாகரன் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பிரபாகரன் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பின்னர் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கம்யூனிஸ்டு கட்சிகள் கோரிக்கை
இதற்கிடையே இறந்த மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.