பணிக்கு வராத 1,420 அரசு டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

தேவையான சந்தர்ப்பங்களில் பணி நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
பணிக்கு வராத 1,420 அரசு டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் மருத்துவ காலிப்பணியி டங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மருத்துவ அலுவலர்களாக தமிழக அரசு பணியில் சேர்ந்த பின்னர் உயர்கல்வி பயிலும் பொருட்டு நீட் தேர்வு அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயில அரசு டாக்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு அனுமதி வழங்கும்போது அவர்கள் பட்ட மேற்படிப்பிற்கு பின்னர் ஓய்வுபெறும் வரை அரசுப் பணியில் தொடர வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பிணைத்தொகை செலுத்தி பணியிலிருந்து விடுவிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பட்ட மேற்படிப்பு கல்வி முடித்த பின்பு சில டாக்டர்கள் தன்னிச்சையாக எவ்வித முன் அறிவிப்புமின்றி பணிக்கு வராமல் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய சென்று விடுகின்றனர். அத்தகைய டாக்டர்களை தொடர் கண்காணிப்பின் மூலம் மீண்டும் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதனை மீறும்பட்சத்தில் அத்தகைய டாக்டர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேவையான சந்தர்ப்பங்களில் பணி நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அவர்கள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக செலுத்த வேண்டிய பிணைத் தொகையினை வட்டியுடன் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அல்லது பிணையாளர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தன்னிச்சையாக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிக்கு வராமல் இருக்கும் டாக்டர்கள் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தன்னிச்சையாக 1,420 டாக்டர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் 370 பேர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் 766 பேர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் கீழ் 284 பேர் பணிக்கு வரவில்லை. மொத்தம் உள்ள 1,420 பேரில் 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 740 பேர் தொடர் நடவடிக்கையின்கீழ் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com