பணி நீக்கம்: துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கி. பிரேம்குமாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டத்தில் துணைவேந்தரால் முன்மொழியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் பலமுறை குட்டு வாங்கினாலும் பழிவாங்கும் போக்கை பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் கைவிடாதது கண்டிக்கத்தக்கது.

உதவி பேராசிரியர் பிரேம்குமார் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 5ம் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் 33 மாதங்களாகியும் அவர் மீதான பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவில்லை. அவருக்கான பிழைப்பூதியமும் உயர்த்தப்படவில்லை. மாறாக, அவரை எப்படியாவது பணி நீக்கம் செய்து விட வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் துடிப்பது மனிதநேயமற்ற செயலாகும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகளுக்காக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்ததும், விசாரணை நடத்த ஆணையிட்டதும் வரவேற்கத்தக்கவை.

அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் புகார்கள், முறைகேடுகள், இட ஒதுக்கீடு விதி மீறிய பணி நியமனங்கள் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அவற்றை விசாரித்து அவை நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளித்திருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் அவர் பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல. எனவே, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தராகிய கவர்னர் உடனடியாக தலையிட்டு, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com