கணவருடன் தகராறு: 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கணவருடன் தகராறு: 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசி. இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா. இவர்களது குழந்தைகள் தஷ்விகா (3), மெய் எழிலன் (1). துளசி மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி தன்னுடைய மனைவி சசிகலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கும் துளசிக்கும் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

துளசி எப்போதும் போல் இருங்காட்டுகோட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா, குழந்தை தஷ்விகா இல்லாததை கண்டு அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். அதே பகுதியில் உள்ள குளத்தில் சசிகலாவும் குழந்தை தஷ்விகாவும் தண்ணீரில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com