மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ம.க. 29-ந் தேதி போராட்டம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ம.க. சார்பில் 29-ந் தேதி போராட்டம் நடத்துவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் இதுவரை 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியர்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.

வன்னியர்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வென்றெடுக்காமல் பா.ம.க.வும் ஓயப்போவதில்லை. வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. இன்னும் களப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. கடந்த டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி இப்போதுவரை 5 கட்டங்களாக அதிகாரிகள் வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் நிகழ்வுகளைத் தான் நடத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்து 29-ந் தேதி நடைபெறவிருக்கும் 6-வது கட்டப் போராட்டத்திற்கு முன்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 29-ந் தேதி போராட்டத்திற்கு பிறகு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் உயர்நிலை அமைப்புகள் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com