

சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று அதில் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் கலந்து கொண்டார்.
இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகளை, பத்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இந்த இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்ட பணிகளை ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பு குழுவினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்படுத்தி உள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்படுகிறார்.
ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாக கே.சிரஞ்ஜீவி, கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா, எஸ்.டி.நெடுஞ்செழியன், ஆர்.எம்.பழனிச்சாமி, Ex.MLA, வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் இந்த பணிகளை மாவட்ட தலைவர்களோடு இணைந்து செயல்படுத்திட 74 கட்சி மாவட்டங்களுக்கு, இயக்கப்பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற 74 முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் பார்வையாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட உள்ளனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.