தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? - மாணிக்கம் தாகூர் கேள்வி

பா.ஜ.க.வை எதிர்த்தால் பல்வேறு வழிகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தி.மு.க. தடம் மாறிப் போகிறதா? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணிக்கம் தாகூர்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா கூட்டணி கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டு நோக்கி பேரணி நடத்தி, தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடுக்கிற போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்றது தலைநகர் டெல்லியை உலுக்கியிருக்கிறது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு, தடை விதிக்கப்பட்டதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த போராட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, எம்.ஏ. பேபி, டி. ராஜா, திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க.வை ஒரு பாசிச கட்சியாக சித்தரித்து பேசிக் கொண்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த எவரும் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிற தி.மு.க.வினர் ஒருவர் கூட பங்கேற்கவில்லையே என்பதுதான் தி.மு.க. தலைமை முன் வைக்கப்படுகிற ஒரே கேள்வி.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கக் கோரியும், கடந்த அக்டோபர் 6 முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 6 அன்று நாடாளுமன்றத்திலிருந்து பேரணி, அக்டோபர் 7 ஜன்பத் முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி, அக்டோபர் 8 ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம், அக்டோபர் 9 நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் மற்றும் ஜனாதிபதியுடன் சந்திப்பு, அக்டோபர் 10 சி.ஜே.பி அமைப்பின் போராட்டம், அக்டோபர் 11 இடதுசாரி அமைப்புகளின் போராட்டம், அக்டோபர் 12 சுப்ரீம் கோர்ட்டு நோக்கி பேரணி மற்றும் போராட்டம் என இத்தனை தொடர் போராட்டங்கள் நடைபெற்றும், நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களை கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் இந்த போராட்டங்களில் ஏன் பங்கேற்கவில்லை?

பா.ஜ.க. ஆளுங்கட்சி என்பதால் அதை எதிர்த்தால் பல்வேறு வழிகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தி.மு.க. தடம் மாறிப் போகிறதா? வகுப்புவாத எதிர்ப்பை கைவிட்டு விட்டதா? நேற்று வரை பா.ஜ.க.வை பாசிச, மக்கள் விரோத கட்சி என்று முழங்கிய தி.மு.க.வினர் இன்று வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்? இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தரக்குறைவாக எழுதி, தரம் தாழ்ந்த அரசியலை தி.மு.க. தலைமை நடத்தலாமா?

காங்கிரஸ் கட்சியின் கேள்வி மிகவும் எளிமையானது. நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்? மோடியையும், அமித்ஷாவையும் எதிர்த்துப் போராடுவதாக தொடர்ந்து கூறுகிறீர்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்து, நாடு முழுவதும் எதிர்கட்சிகள் வீதியில் இறங்கி போராடும்போது உங்கள் போராட்டம் எங்கே? முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் தனது உரையின் முடிவில் சனாதனம் ஒழிக என்று முழங்கினார். அடுத்த கூட்டத்தொடரில் அந்த முழக்கம் காணாமல் போனது ஏன்? சட்டமன்றத்தில் முழக்கம், பின்னர் அமைதி, வீதியில் மௌனம், முரசொலியில் தனிநபர் தாக்குதல் இதுதான் தி.மு.க.வின் கலாசாரமா? மோடியையும், அமித்ஷாவையும் நீங்கள் உண்மையிலேயே எதிர்க்கிறீர்கள் என்றால் இந்த போராட்டங்களில் தி.மு.க.வின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருக்க வேண்டாமா? மோடி - அமித்ஷாவுடன் உங்களுக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கிறது? அதை ஏன் விளக்கத் தயங்குகிறீர்கள். ஏதேனும் திரைமறைவில் ரகசிய உடன்பாடு இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

இந்தியாவிலேயே பா.ஜ.க. நுழைய முடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதாக கடந்த சட்டமன்றத் தேர்தல் முன்பு உரத்தக் குரலில் முழங்கிய நீங்கள் தற்போது பா.ஜ.க.வுக்கு வெண்சாமரம் வீசத் தயாராகி விட்டீர்களா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தி.மு.க. நடத்தும் தனிநபர் தாக்குதல்கள் பதிலாகி விட முடியாது. தி.மு.க.வின் மௌனம் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. இதை தி.மு.க. தலைமை தெளிவுபடுத்த வேண்டுமேயொழிய, காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து விமர்சிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதை தி.மு.க. தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com