திமுக ஆட்சியில் பல வருடங்களாக ஏ.ஐ. மூலம் போலி புத்தகங்களை உருவாக்கியுள்ளனர் - அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் 523 போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்
Published on: 

சென்னை,

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்களை கொள்முதல் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் 523 போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கன்னிமாராவில் போலி நூல்கள்

கன்னிமாரா நூலகத்தில் புத்தகம் என்ற பெயரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போலி நூல்களை கண்டுபிடித்துள்ளோம். கன்னிமாராவில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தின் 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. கன்னிமாரா நூலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி நூல்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை.

பல வருடங்களாக உருவாக்கியுள்ளனர்

திமுக ஆட்சியிலேயே விஜய் பெயரில் போலி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விஜய் பாலு, விஜய் ஆதித்தன் ஆகிய எழுத்தாளர்களின் பெயர்களில் உள்ள புத்தகங்களில் 2025-ம் ஆண்டுக்கான சீல் உள்ளது. திமுக ஆட்சியில் பல வருடங்களாக ஏ.ஐ. மூலம் போலி புத்தகங்களை உருவாக்கியுள்ளனர். தவெக ஆட்சியில் இதுவரை ஒரு நூல் கூட கொள்முதல் செய்யவில்லை.

நடிகர், நடிகைகள் பெயர்களை எழுத்தாளர்கள் போல் திரித்து போலியாக புத்தகங்கள் கொள்முதல் செய்து ஊழல் செய்யப்பட்டுள்ளது. நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் ஆகியோரது பெயர்களிலும் கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன. திமுக ஆட்சியில் கூட்டு சதி செய்து புத்தக கொள்முதலில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் வரும் என்பதை திமுக எதிர்பார்க்கவில்லை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாட்டிக் கொண்டனர்.

அறிவுத்தளத்திற்கு விடப்பட்ட சவால்

ஸ்காட்லாந்து போலீசால் கூட புத்தகம் எழுதியவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. கோவை பெரியார் அறிவுலகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் போலியாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. பெரியாரின் பெயரைச் சொல்லி திமுக பெரியாருக்கே விபூதி அடித்து விட்டது. அறிவுத்தளத்திற்கு விடப்பட்ட சவால் இது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அகல்விளக்கு பதிப்பகம் எங்கே இருக்கிறது? என்பது பபாசி அமைப்புக்கே தெரியவில்லை. அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படும். அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்று ஒரே முகவரியில் 20 பதிப்பகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பல மோசடி பதிப்பகங்கள் இருக்கலாம். முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைத்து நூலகங்களிலும் ஆய்வு

அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்து ஏ.ஐ. போலி நூல்களை கண்டுபிடிக்க கூறியுள்ளோம். திருச்சி காமராஜர் நூலகத்திற்கான கொள்முதல் நடவடிக்கைகளை ரத்து செய்யப் போகிறோம். தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X