தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த கட்சி ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவர்த்தையை முன்னெடுத்து வந்தனர்.

ஆனால் தி.மு.க. தரப்பில் 3 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்படும் என்று தெரிவித்ததால், உடன்பாடு ஏற்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தி.மு.க-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் இடையே நேற்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

3 தொகுதிகள் ஒதுக்கீடு

இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க.வின் நிலைப்பாட்டை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஏற்றுக்கொண்டதால், தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கொங்குநாடு மக்கள் கட்சி பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் கையெழுத்திட்டனர்.

பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உதயசூரியன் சின்னத்தில் போட்டி

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளிலும் எங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய கூட்டணி கட்சிகள் வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் பணியாற்ற இருக்கிறோம். கண்டிப்பாக எங்களுடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 72 இடங்களில் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com