

சென்னை,
தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேற்று சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்தல் கமிஷன் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இறுதி வாக்காளர் பட்டியலையடுத்து வாக்காளர்களின் வயது விவரங்களை வெளியிடவில்லை. தேர்தல் கமிஷன் மூலம் பகிரப்படும் ஆவணங்கள் ஒரே மாதிரியானவை இருப்பதில்லை. அவற்றில் முரண்பாடுகள் உள்ளன. எனவே சீரான பட்டியலைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் கணக்கெடுப்பு படிவங்களின்படி முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. பழைய வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களே தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. இதை சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். புதிய வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப, உடனடியாக வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்க வழிவகை செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஊடக விளம்பரத்திற்கும் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் செயல்பாட்டின் போது எழும் பிரச்சினைகள் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அனுமதிகளை வழங்கவும் ஒரு உயர் மட்ட குறை தீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவுகளுக்கான விகிதங்களை நிர்ணயிப்பதில் கணிசமான வேறுபாடு உள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் சந்தை விலையில் மாறுபடுகிறது. எனவே, தேர்தல் செலவுகளுக்கான விகிதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
எங்கள் கட்சித் தலைவர் ஏற்கனவே கோரியபடி, தேர்தல் கமிஷனின் கையேடுகளை தமிழில் வெளியிட வேண்டும். தமிழ் பதிப்பு இல்லாமல் சமீபத்திய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்வதும் பின்பற்றுவதும் மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் மொழியாக்கத்தை தேர்தல் கமிஷனின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.