

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு திமுக ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கி வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடர்பாக திமுக மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதன்படி, கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கி வருவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மாநில வழக்கறிஞரணி துணைச் செயலாளரான ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு, மதியழகன் போட்டியிடும் பர்கூர் மற்றும் செந்தில்குமார் போட்டியிடும் பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியான திமுக சார்பில் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கி வருவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறலாகும்.
திமுகவினர் தேர்தலில் குறுக்கு வழியில் வாக்குகளை பெறும் நோக்கில், தேர்தலுக்கு முன்பாகவே ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சீரியல் நம்பர்களுடன் வாக்காளர்களுக்கு டோக்கன்களாக வழங்கி வருவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டவிரோதமானதாகும்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, இதுவரை வழங்கப்பட்ட கூப்பன்களை பறிமுதல் செய்து நேர்மையாக தேர்தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.