ரூ. 400 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
ரூ. 400 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on: 

சென்னை,

ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதனிடையே, கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக கூறி ரூ. 400 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மகேஷ் கைது

இதனிடையே, ரூ. 400 கோடி லஞ்ச வழக்கில் முன்ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 26ம் தேதி தள்ளுபடி செய்தது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் அன்றைய தினமே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ஊழல் தடுப்பு கோர்ட்டு கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இந்நிலையில், அன்பில் மகேசின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ரூ. 400 கோடி லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நீதிமன்ற காவலை 2ம் தேதி வரை நீடித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.

முன்னதாக, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X