

புதுடெல்லி,
காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண் 2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மூத்த வழக்கறிஞர் பி.வில்சனால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டிடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன:
I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும்சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.
கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடி தலையீடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் தி.மு.க. கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.