

சென்னை,
தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகள் அதன் விழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை சிறையில் அடைக்க மறுத்து அதிகார மமதையில் சுற்றித் திரியும் தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான கலையரசனின் புகைப்படம் இருந்த ஒரே காரணத்திற்காக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அதிரடியாக அதிகாலை நேரத்திற்குள் வீடுபுகுந்து கைது செய்து அலைக்கழித்த விவகாரத்தில், முதல்-அமைச்சர் தலையிட்டு தவறுக்கு பொறுப்பேற்பது தீர்வாக அமையாது என நீதிமன்றம் குட்டு வைத்த பின்னரும், தற்போது பி.எம். மன்னனின் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் அளவிற்கு தவெக அரசுக்கு அதிகார வெறி தலைக்கேறிவிட்டதா?
காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவல் படையோ, அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமோ அல்ல என்பதற்கு நீதிமன்றம் வைத்திருக்கும் இந்த குட்டே சிறந்த உதாரணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு, தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளுமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைம் மீண்டும் ஒருமுறை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.