திமுக விரக்தியின் விளிம்பில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி

திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
திமுக விரக்தியின் விளிம்பில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக தொண்டர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!

நடந்து முடித்த தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும், திமுக-வினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக, உடுமலைப்பேட்டை தொகுதி, பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றியம், தொண்டாமுத்தூர் தோட்டத்து சாலையில் வசிக்கும் கழக உடன்பிறப்பு மாரிமுத்து 24.4.2026 அன்று தனது மாற்றுத் திறனாளி மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகளத்தில் அழைத்துச் செல்லும்போது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல் , தேர்தல் நாளன்று தனக்கு எதிராக பணியாற்றியதை சுட்டிக்காட்டி, தான் ஓட்டி வந்த காரை, கழக நிர்வாகி மாரிமுத்துயின் இருசக்கர வாகனத்தின் மீது கொலை வெறியுடன் மோதியுள்ளார்.

இதில் மாரிமுத்துவும், அவரது மகனும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த அருண், ஜெகநாதன், சுகுமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் படுகாயமடைந்த மாரிமுத்துவையும், அவரது மகனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு, தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் செல்லும்போது, திமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், அவரது மனைவி பானுமதி அவரது தந்தை கோபால்சாமி மற்றும் திமுக-வைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலர், அருண் ஒட்டி வந்த நான்கு சக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியதுடன், காப்பாற்றிய நால்வர் மீதும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயமடைந்த கழக நிர்வாகி மாரிமுத்து மற்றும் அவரது மாற்றுத் திறனாளி மகன் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியில், கழகத்தின் சார்பில் இதயாத் என்பவர் 1-வது வார்டு வாக்குச் சாவடி முகவராக நியமிக்கப்பட்டு தீவிர தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை திமுக-வினர் தாக்கியுள்ளனர். காயமடைந்த இதபாத் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

சிகிச்சை பெற்றுவரும் கழக நிர்வாகிகள், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆட்சி முடியும் நேரத்தில்கூட விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர் செய்யும் அடாத செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com