

சென்னை,
தமிழக அரசியல் சூழ்நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது.
த.வெ.க. எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
எனவே த.வெ.க. ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்துவதாக தி.மு.க. மீது த.வெ.க. வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் தி.மு.க. எம்.எல். ஏ.க்களை விலைக்கு வாங்க த.வெ.க. அரசு முயற்சி செய்து வருவதாக தி.மு.க.வும் குற்றம் சுமத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இதுவரை அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல். ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது அப்பட்டமான குதிரை பேரம் என்று அ.தி. மு.க. குற்றம் சுமத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அமைச்சரவை கூட்டத் தில் 2 தனிநபர்கள் கலந்து கொண்டது குறித்து கவர்னர் விசாரிக்க வேண்டும் என்று நேற்று ஒரே நாளில் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை இந்த குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகவினர்தான். ஜெயலலிதா இருந்த காலத்தில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிற போது, மதிமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்தனர். பிறகு மீண்டும் திமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை அளித்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்தவர். அவரையும் அதை தான் செய்தனர். குதிரை பேரத்தை முதல் முதலில் உருவாக்கியதே திமுகவினர்தான். எங்களுக்கு அந்த நிலை இல்லை.
குதிரை பேரம் என்பது எனக்கு புரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என்கிறார்கள். ஆகவே அதற்கு வேறு பொருள் தமிழகத்திற்கு தேடி கொண்டு இருக்கிறோம்.
எப்படி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறோம். அது கிடைத்தால் அதற்கான பதில் தெரிவிக்கப்படும். நாங்கள் இன்றைக்கு வலிமையாக ஆட்சி அமைத்து இருக்கிறோம், எங்கள் கூட்டணி வலிமையான ஆதரவை தந்து இருக்கிறது. இன்றைக்கு அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்கள். குதிரை பேரத்திற்கே வேலை இல்லை. வலிமையான, நேர்மையான ஆட்சி, தமிழ் மக்கள் அனைவரும் விரும்பிய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 96 பேர் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்தியவர்களுக்கு தான் குதிரை பேரம் தேவை. எங்களுக்கு தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.