குதிரை பேரத்தை தொடங்கியதே திமுகதான்: வைகோ தாக்கு

திமுக ஆட்சியில் கொடிகட்டி பறந்த ஊழலை இல்லாமல் ஆக்கிவிட்டார் விஜய் என்று வைகோ பேசினார்.
குதிரை பேரத்தை தொடங்கியதே திமுகதான்: வைகோ தாக்கு
Published on

நெல்லை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - குதிரை பேரம் என்கிற இழிவான வேலையை தொடங்கியதே திமுக தானே? மதிமுக சார்பில் கம்பம் தொகுதியில் வென்ற ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வைத்தீர்களே, அது என்ன பெருச்சாளி பேரமா? இந்த மாதிரி வேலையை செய்ததே நீங்கள் தானே? இப்பொழுது அதிமுக மீது குற்றம் சாட்டுகிறீர்கள்.தமிழகத்தில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது.

நெஞ்சில் குத்திவிட்டார்கள்

அதே சமயம், முதல் அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும். திமுக கூட்டணியில் இருந்தபோது எங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டது. சுயமரியாதையைக் காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. திமுக எங்களை முதுகில் குத்தவில்லை; நெஞ்சில் குத்திவிட்டார்கள். எங்கள் கட்சியினர் உறுதியுடன் இருக்கிறார்கள்.எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள். எங்கள உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி கட்டாயப்படுத்துனீங்களே. பிடிவாதம் பிடித்து நிற்கவைத்தார்கள்.

விஜய் பங்கேற்கிறார்

5 ஆண்டுகளுக்கு விஜய் ஆட்சி தான் நடக்கும், அடுத்துவரும் தேர்தலிலும் விஜய் வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சர் ஆவார். திமுக ஆட்சியில் கொடிகட்டி பறந்த ஊழலை இல்லாமல் ஆக்கிவிட்டார் விஜய். இந்த அரசை மக்கள் நேசிக்கிறார்கள். முன்பை விட இப்போது ஆதரவு கூடியுள்ளது. முன்பு பொடா சட்டக் கொடுமையிலிருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தது நாங்கள்தான். வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெல்லியில் எனது நாடாளுமன்ற உரைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதில் முதல் அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். மேலும், செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்," என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com