மனைவி, மகளை கொன்று திமுக பிரமுகர் தற்கொலை: கடன் பிரச்சினையில் விபரீத முடிவு

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வரும்போது திடீரென ஒருவர் குறுக்கே பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
தி.மு.க. பிரமுகர், மனைவி, மகள்
Published on
Updated on

தர்மபுரி,

கடன் பிரச்சினையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு ஓடும் லாரியின் குறுக்கே பாய்ந்து தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

தி.மு.க. பிரமுகர் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகில் முண்டாசுபுறவடை கிராமத்தில் சாலையோரம் நின்ற ஒருவர், திடீரென தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வரும்போது குறுக்கே பாய்ந்தார். இதில் அவர் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் தர்மபுரி அன்னசாகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 45) என்பதும், தி.மு.க. பிரமுகரான இவர், செந்தில்குமார் எம்.பி.யாக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். தர்மபுரி கோட்டை கோவில் அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு சரண்யா(36) என்ற மனைவியும், சாத்விகா(14) என்ற மகளும் இருந்தனர்.

தாய்-மகள் உடல்கள்

உடனே போலீசார் சந்தோஷ் இறந்த தகவலை தெரிவிக்க அவருடைய வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டுக்குள் டி.வி. ஓடும் சத்தம் மட்டும் அதிகமாக கேட்டது. உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, சந்தோஷ் மனைவி சரண்யா, மகள் சாத்விகா இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி-மகள் கொலை

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சந்தோஷ் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளார். அப்படி இருந்தும் அவருக்கு போதிய வருமானம் இல்லையாம். குடும்பத்தை நடத்த பலபேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்த கடனால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட் டுள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று இருந்த மகள் சாத்விகாவை காலை 10 மணிக்கு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், சுத்தியலால் மகளின் தலையில் அடித்துக்கொலை செய்து இருப்பதாகவும், மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அவர், வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போதுதான், லாரியின் குறுக்கே பாய்ந்து சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

வீடியோவில் சந்தோஷ் உருக்கம்

தற்கொலை செய்வதற்கு முன்பாக சந்தோஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் யாரையும் ஏமாற்றவில்லை. என் மனைவி, மகளை மகாராணி போல் வைத்திருந்தேன். அவர்கள் வசதியாக வாழ்ந்து விட்டார்கள். இதுக்கு மேல் அவர்களை கஷ்டப்படுத்த முடியாது. அவர்களை கொலை செய்யவில்லை. என்னுடன் கூட்டி செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டபோது கடன் அதிகமாகிவிட்டது. அதனால் பங்குச்சந்தை முதலீடு செய்தேன். யாரும் பங்கு சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நானும் செத்து விடுவேன். உறவினர்கள், நண்பர்கள் என்னை மன்னித்து விடுங்கள்' என்று பேசியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com