

திருச்சி,
திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-
ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில மரபுக்கு மீறிய வார்த்தைகள் வரும் போது அதை நீக்குவது வழக்கம். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சரியாக செய்து கொண்டிருக்கிறார். தவெகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மாண்புடன் அமர்ந்துள்ளனர். உரிய நேரத்தில் பேசுகின்றனர்.
ஆனால் நாங்கள் பேசும் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் எப்படியாவது சண்டை நடத்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். தகாத வார்த்தைகளில் பேசுவது, முன்வரிசைக்கு ஓடி வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டமன்றத்தில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்; அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர்.
முதல்-அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும்போது அமைச்சர்கள் பதில் சொல்வதில் என்ன தவறு?. அமைச்சர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக தான் இருக்கின்றனர். எங்களின் ஆட்சியில் எங்கள் முதல்-அமைச்சரை நோக்கி கேள்விகள் வரும் போது நாங்கள் பதில் சொல்கிறோம். உங்களுக்கு எதிர்க்கருத்துகள் இருந்தாலும் எழுந்து பேசுங்கள். யாரும் பேச வேண்டாம் என தடுக்கவில்லை. துறை சார்ந்த அமைச்சர்களும் பதில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கு பிரச்சினை என்பது கேள்விகள் சரியாக இருக்கிறதா? பதில்கள் சரியாக இருக்கின்றனவா? இதைத் தான் பார்க்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பேசும்போது, நாங்கள் எந்தவித தவறும் இல்லை. மிகவும் தூய ஆட்சியை செய்ததாக குறிப்பிடுகிறார். இத்தகைய சூழலில் தற்போதைய ஆட்சியில் இந்து அறநிலையத்துறையில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகவுள்ளன என்று வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் எந்தெந்த கோயில்களில் என்னென்ன வேலைகளை செய்திருக்கிறோம்? ஆடிட் செய்தது என்ன? போன்றவற்றை அதிகாரிகளை வைத்து கொண்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தவறே செய்யாதவர்கள் எதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அரசின் ரகசியமான ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு, அதை சட்டப்பேரவையில் பேசுவதே தவறு இல்லையா?. இவ்வாறு ஆவ்ர் கூறினார்.