

கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கா. கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் பி. கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இன்று காலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.
இந்த தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு போலீஸ் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி எம்.எல்.ஏ.வை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
பின்னர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஜி.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்து பாளயைங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவர் 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.