

சென்னை,
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், "வாயைத் திறங்க CM" என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
மேலும் அவர்கள் தங்கள் கைகளில், "கதறல் கேட்குதா CM?", "சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?", "ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?", "திரையில் நாயகன்.. தரையில் வில்லன்", "தூய சக்தி அல்ல துயர சக்தி" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.