தி.மு.க.வா..? த.வெ.க.வா..? வைகோ எடுத்த அதிரடி முடிவு? - திடீர் டுவிஸ்ட் கொடுத்த ம.தி.மு.க. எம்.எல்.ஏ.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (சனிக் கிழமை) ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க.வா..? த.வெ.க.வா..? வைகோ எடுத்த அதிரடி முடிவு
Published on

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தை சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

தி.மு.க.-ம.தி.மு.க.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதுவும் அவர்களுக்கு தி.மு.க.வின் உதயசூரியன் சின்னமே ஒதுக்கப்பட்டது. இது ம.தி.மு.க. தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.

கடையநல்லூர், சீர்காழி

தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர்கள் கடையநல்லூர், சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றிபெற்றனர்.

அணி மாறிய கூட்டணி கட்சிகள்

சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவை தெரிவித்தன.

இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையிலும் இடம் பெற்றன. அதே நேரம் ம.தி.மு.க.வும், த.வெ.க.வுடன் நெருங்கி வந்தது. ஆனால் ம.தி.மு.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், நேரடியாக ஆதரவு தரமுடியவில்லை

உயர்நிலைக்குழு கூட்டம்

தேர்தலின்போது தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பை வைகோவும் வெளிப்படுத்தினார். இதற்கிடையே, முதல்-அமைச்சர் விஜய்யை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் 17 உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன் (கடையநல்லூர்), செந்தில் செல்வன் (சீர்காழி) ஆகியோர் அழைக்கப்பட் டனர்.

சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணிப்பு

இதில் கடையநல்லூர் ராஜேந்திரன் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டார். செந்தில் செல்வன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், இதனால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அவர் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

திமுக.வா..? த.வெ.க.வா..? - இன்று முக்கிய முடிவு

இதனிடையே ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைப்பது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தி.மு.க. கூட்டணி வேண்டாம் என ஒருமனதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (சனிக் கிழமை) ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com