

சென்னை,
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. -ரூ.197 கோடி, அ.தி.மு.க. ரூ.112 கோடி செலவு செய்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றன. அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் கமிஷனிடம், தேர்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களின் தேர்தல் செலவின பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. அதன்படி தி.மு.க. ரூ.197 கோடியும், அ.தி.மு.க. ரூ.112 கோடியும் செலவு செய்துள்ளன.
தி.மு.க. தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக தி.மு.க.விடம் ரூ.365 கோடி கையிருப்பு இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலம் ரூ.126 கோடி வசூலாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மொத்தமாக ரூ.197.84 கோடியை செலவிட்டுள்ளது. பத்திரிகை, டி.வி. மற்றும் சமூக வலைத்தள விளம்பரங்களுக்காக ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் விமானப் பயணங்களுக்காக ரூ.5.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் ரூ.149.89 கோடியை தி.மு.க. செலவு செய்துள்ளது.
இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு ரூ.2.66 கோடியும், கமல்ஹாசனுக்கு ரூ.3.24 கோடியும் செலவிடப்பட் டுள்ளது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் 'பென்' நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தேர்தல் நிதியாக தலா ரூ.25 லட்சத்தை தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் செலவுகள் போக, தி.மு.க.விடம் மீதம் ரூ.319.39 கோடி இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவுத் தொகையாக ரூ.112.39 கோடி காட்டப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு கட்சியின் கையிருப்பாக ரூ.313 கோடி இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் ரூ.87.41 கோடி வரவு வந்துள்ளது.
அ.தி.மு.க.வின் மொத்த செலவான ரூ.112 கோடியில், ரூ.103 கோடி, பிரமான்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங் நிறுவ னத்திடம் சமூக வலைத்தள மற்றும் ஊடக விளம்பரங்களுக் காக அ.தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் அ.தி.மு.கவின் வங்கிக் கணக்கில் ரூ.295 கோடி இருப்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு முன்பு கட்சியின் கணக்கில் ரூ.19 லட்சம் இருந்தது. தேர்தல் நேரத்தில் ரூ.2.20 கோடி வசூலானது. தேர்தலில் அக்கட்சி மேற்கொண்ட மொத்த செலவு ரூ.1.37 கோடியாகும். பிரசாரம் மற்றும் விளம்பரங்க ளுக்காக ரூ.93 லட்சமும், வேட்பாளர்களுக்கான செலவுக்காக ரூ.44 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் சீமான் உள்ளிட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்சி நிதி வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்தபிறகு அக்கட்சியின் வசம் ரூ.64 லட்சம் இருப்பில் உள்ளது.