சட்னியைப் பற்றி பேசும் தி.மு.க., கிட்னியைப் பற்றி பேச மறுக்கிறது - அ.தி.மு.க. கிண்டல்

அட்லீ குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் கூறியிருந்தார்.
சட்னியைப் பற்றி பேசும் தி.மு.க., கிட்னியைப் பற்றி பேச மறுக்கிறது - அ.தி.மு.க. கிண்டல்
Published on

சென்னை,

சட்டமன்றத்தில் சட்னியைப் பற்றியும் பேசுவோம் என்று தி.மு.க. கூறுகிறது, ஆனால் கிட்னியைப் பற்றி மட்டும் தி.மு.க. பேச மறுக்கிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ‘எக்ஸ்’ தளத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இன்றைய சட்டமன்றத்தில் திரைப்பட இயக்குநர் அட்லீயைப் பற்றிப் பேசுகிறார்கள்..! கேள்வி கேட்டால் சட்னியைப் பற்றியும் பேசுவோம் என்கிறது தி.மு.க..! ஆனால் தி.மு.க.வைப் பார்த்து குற்றம் சாட்டிய கிட்னியைப் பற்றி மட்டும் பேச மறுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், “இயக்குனர் அட்லீ சிறந்த திரைப்பட காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார். அதேபோல எங்கள் ஆட்சியின் சாதனைகளை வைத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது. காலங்களும், காட்சிகளும் மாறும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராகியுள்ளார். ஆனால் முழுநேர அரசியல்வாதியான சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், சட்டசபையில் இயக்குனர் அட்லீ குறித்தும், எடிட்டிங் குறித்தும் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அட்லீக்கும் சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், “அட்லீ குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன்” என்றார். இதனை குறிப்பிடும் வகையில்தான் வைகைச்செல்வன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com