தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு அணி (ஐடி அணி) நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்ட் வைத்திருக்கும் அரசியல் இயக்கம் திமுகதான். ஆன்லைன் மட்டுமின்றி ஆப்லைனிலும் கலக்கும் அணியாக திமுக ஐடி அணி இருக்கிறது. கண்டென்ட்டில் கிங் திமுகதான். கட்சிக்காக உழைப்போர் போர்வாள். இணையத்தில் உழைப்போர் பையர்வால்.

நம்மை களங்கப்படுத்தி, தமிழகத்திற்குள் நுழைய சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல் ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.

டிபென்ஸ் மோடு மட்டுமே போதாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும்.

தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நின்கின்றனர்.

பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. பொய் செய்தி பரப்பினால் உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால் அவர்கள் அதை நீக்கிவிட்டு ஒட வேண்டும்.

பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள். திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும். தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று அது எவ்வளவு பெரியது என்பதற்காகவே உழைக்கிறோம். திராவிடத்தால் எழுந்தோம் என்ற நன்றி உணர்வோடு எந்த எதிர்பார்ப்புமின்றி இயங்குவது தான் திமுக ஐடி விங்.

என்றார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com