ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வழங்க வேண்டும்; கவர்னருக்கு, தி.மு.க. கடிதம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசிய நிலையில், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய முன் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக கவர்னருக்கு, தி.மு.க. கடிதம் அனுப்பி உள்ளது.
ராஜ்மோகன்
ராஜ்மோகன்
Published on: 

கவர்னருக்கு கடிதம்

தி.மு.க. சார்பில் சட்டத்துறை இணை செயலாளர் வக்கீல் பரந்தாமன் தமிழக கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-கடந்த 1-ந் தேதி எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்று பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு இயல், இசை. நாடக மன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகவும், அவரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகார் மனு மீது வழக்குப்பதியவில்லை.ராஜ்மோகன் அமைச்சராக இருப்பதால், அந்த புகார் மனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988-ன்படி வழக்குத் தொடர முன் அனுமதி அளிக்க வேண்டும்.

இடைத்தரகரின் பங்கு

ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாக கூறப்படும் நபரின் அடையாளம், இடைத்தரகரின் பங்கு ஆகியவற்றை விசாரிக்க வேண்டியது அவசியமாகும்.இந்த புகார் மீதான விசாரணை முடிவடையும் வரை , இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பது, முடிவெடுப்பது போன்றவற்றில் இருந்து அமைச்சர் ராஜ்மோகனை விலக்கி வைக்க வேண்டும்.அமைச்சர் ராஜ்மோகன் தரப்பில் இருந்து எந்தவொரு தலையீடும், செல்வாக்கும் இல்லாதவகையில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் மூலம் இந்த விவகாரம் சுதந்திரமாக கையாளப்பட வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

அமைச்சரின் பேச்சு, பொது நிர்வாகத்தின் நேர்மை மற்றும் பொது பதவிகளின் புனிதத்தன்மை தொடர்பானவை. இந்த விவகாரத்தில் சுதந்திரமான புலனாய்வு அவசியமாகும்.எனவே, இந்த விவகாரம் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு தேவைகளுக்கு ஏற்ப நேர்மையாகவும், சுதந்திரமாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

X