நயினார் நாகேந்திரன் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
நயினார் நாகேந்திரன் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

2024ல் மக்களவை தேர்தலின்போது தாம்பரத்தில் நெல்லை விரைவு ரெயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. நெல்லை மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. நயினார் நாகேந்திரன் அவரது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக மூல வழக்குப்பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய தி.மு.க.வின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி, அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது. ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தி.மு.க. எம்.பி. கிரிராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com