திமுகவின் கூப்பன் நாடகம், ஆபாச வசவுகளால் இளம்பெண் தற்கொலை; விஜய் கண்டனம்

சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்
திமுகவின் கூப்பன் நாடகம், ஆபாச வசவுகளால் இளம்பெண் தற்கொலை; விஜய் கண்டனம்
Published on

சென்னை,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண் வீட்டிற்கு பரிசு கூப்பன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் சிந்துஜாவை ஆபாசமாக பேசி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மன உளைச்சல் அடைந்த சிந்துஜா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுகவின் கூப்பன் நாடகம், ஆபாச வசவுகளால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் மேலும், இந்த நிகழ்வுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில்

திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.

சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா?

உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா?

மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?

இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com