19-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை கழகம், அண்ணா அறிவாலயம்.
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முப்பெரும் விழா

தி.மு.க. தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் அன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் நாள் தொடர்பாக இன்று தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15.9.2026 அன்று நடைபெற இருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.9.2026, சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" வைத்து நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com