

ஈரோடு,
தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையின் ஈரோடு மின் ஆய்வாளர் உசேன்பாஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய மின்சார பாதுகாப்பு தினம் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜூன் 26-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி பொதுமக்கள் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி, மின்சார பிளக் சாக்கெட்டுகளில் விரல்கள் அல்லது வேறு எந்த மின் கடத்தும் பொருட்களையும் நுழைக்கக்கூடாது. மின் சாதனங்களில் இருந்து தண்ணீரை விலக்கி வைக்க வேண்டும். ஒரு பிளக்கை அகற்றும்போதும், சொருகும்போதும் மின்சாரத்தை துண்டித்த பிறகே செய்ய வேண்டும். அறுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது.
பொதுமக்கள் உறங்கும்போது உங்கள் மின் சாதனங்களுக்கு சார்ஜ் போட வேண்டாம். போலியான சார்ஜர்கள் வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம். ஈரத்துணிகளால் மின் சாதனங்களை துடைக்கக்கூடாது. பழைய பழுதடைந்த மின்ஒயர், கம்பிகளை பயன்படுத்தி மின் இணைப்பு கொடுக்கக்கூடாது. மின் சாதனங்கள் இணைக்கும் பிளக் சாக்கெட்டு இணைப்புகளில் "எர்த்" இணைப்பு அவசியம் செய்ய வேண்டும். குழந்தைகளின் கையில் எட்டும் வகையில் மின் சாதனங்கள் பொருத்தவோ, வைக்கவோ கூடாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.