

கும்பகோணம்,
கும்பகோணத்தில் கோவில்களில் சாமி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் நாகரிகமான பேச்சுவழக்கை பின்பற்ற வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசியல் லாபத்திற்காக ஒருவரை இழிவுபடுத்த நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களின் சுதந்திரத்தையும் முடக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
த.வெ.க. அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், மக்கள் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் பிரச்சினைகள் மற்றும் போதை கலாசாரத்திற்கு முந்தைய ஆட் சியை காரணம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழகத்தின் மிகப்பெரிய பின்னடைவு. திமுக அரசு கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை தவெக அரசு கைவிடும் என்றால் அது மிகப்பெரிய தவறு.
சேலம் விவசாயிகளுக்கு நீதி கிடைத்தது போல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூரிலும் என்ன செய்ய முடி யும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும் போதே மேகதாது அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டும்.
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சிக்கு மோதல் போக்கு ஏற்பட்டு விட்டதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்றைய முதல்-அமைச்சர் நாளயை பிரதமர் என்ற த.வெ.க.வினர் கருத்துவிற்கும், பேறுகால விடுப்பு அறிவிப்பிற்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.