மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

மதுராந்தகம் ஏரி சீரமைக்கும் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல நீளும் சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மதுராந்தகம் ஏரியை முழுமையாகத் தூர்வாரி, முழுக் கொள்ளளவை மீட்டெடுப்பதுடன், அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை 791 மில்லியன் கன அடியாக அதிகரிப்பதற்கான திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்காக 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.

திட்ட ஒப்பந்தத்தின்படி, மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கும் பணிகள் 24 மாதங்களில், அதாவது 2023-ம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதன் மூலம் 2023-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்பதுதான் திட்டம். ஆனால், 41 மாதங்கள் ஆகியும், 2024-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியும் கூட மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

சீரமைப்புப் பணிகள் தாமதமாகிக் கொண்டே செல்வதால் எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் மதுராந்தகம் ஏரி இப்போது வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் கருவேல மரங்கள் வளரத் தொடங்கிய நிலங்கள், நெல் சாகுபடிக்கு பயன்படாத தரிசு நிலங்களாக மாறி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது. பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com