

நாகை,
நாகையில் ஓட்டுநர் போல உடை அணிந்து பேருந்தை இயக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதில் இருந்த ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை சாவியுடன் நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக சென்றனர்.
இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஓட்டுநர் உடையை அணிந்து பேருந்தில் ஏறி அங்கிருந்து இயக்கி சென்றுள்ளார். தூரத்தில் இருந்து இதனைப் பார்த்த அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் விரைந்து சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், பேருந்தில் இருந்த மர்ம நபரை விசாரித்துள்ளனர். பேருந்தை ஓட்டி சென்ற மர்ம நபர் போதையில் இருந்துள்ளார். இது குறித்து ஓட்டுநர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.