

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தையில், முருங்கைக்காய் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தாராபுரம் சாலையில் காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் டன் கணக்கில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கான ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளதாலும், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகளிடையே தேவை அதிகரித்துள்ளதாலும் இன்று (புதன்கிழமை) முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இன்றைய ஏல நிலவரப்படி, முருங்கைக்காய் வகைகளின் மொத்த விற்பனை விலை (1 கிலோ) பின்வருமாறு:-
• நாசிக் முருங்கைக்காய்: ரூ.191
• மரம் முருங்கை: ரூ.173
• கரும்பு முருங்கை: ரூ.70
• செடி முருங்கை: ரூ.58
முருங்கைக்காய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.