

திங்கள்சந்தை,
கார் மீது டாரஸ் லாரியை மோதி விபத்து ஏற்படுத்திய டிரைவர், பொதுமக்களின் தர்ம அடிக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் நிகந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில்- களியக்காவிளை 4 வழிச்சாலை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குளச்சல் போக்குவரத்து போலீசார் தினமும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு டாரஸ் லாரி தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தோட்டியோட்டில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வந்த போது எதிரே ஒரு சொகுசு கார் வந்தது. எதிர்பாராத விதமாக டாரஸ் லாரியும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.
விபத்து நடந்ததும் அந்த வழியாக வந்தவர்கள் அங்கு திரண்டு காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனாலும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் டாரஸ் லாரி டிரைவரிடம் கீழே இறங்குமாறு சத்தமிட்டனர்.
பொதுமக்களின் ஆவேச குரலை கேட்டு லாரி டிரைவர் மிகவும் அச்சமடைந்தார். பொதுமக்களின் கையில் சிக்கினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்து போன டிரைவர் லாரியின் ஜன்னல் வழியாக வெளியே வந்தார். தொடர்ந்து லாரியின் பின்பக்கம் வழியாக வேகமாக சென்று சாலையோரம் இருந்த குளத்தில் குதித்தார். இதைபார்த்த பொதுமக்கள், 'அவரை பிடியுங்கள்... பிடியுங்கள்...' என கூச்சலிட்டனர்.
இதை கேட்டு மேலும் அச்சமடைந்த டிரைவர் தண்ணீரில் வேகமாக நீந்தி குளத்தின் மறுகரைக்கு சென்று புதர்கள் இடையே கரையேறினார். தொடர்ந்து அருகில் இருந்த தென்னந்தோப்பு வழியாக ஓட்டமும் நடையுமாக தப்பி செல்ல முயன்றார்.
இதற்கிடையே அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த குளச்சல் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர். அப்போதுஅவர் மது போதையில் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், லாரி மற்றும் சொகுசு காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதற்கிடையே லாரி டிரைவர் ஜன்னல் வழியாக வெளியேறி குளத்தில் குதித்து தப்பி செல்வதை அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.