தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?

தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.
தேர்தல் அறிவிப்பால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்லக்கூடாது: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன...?
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன.

ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடை பெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது. அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்துவிடுவார்கள்.

அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:-

* ஒட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.

* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது.

* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அரசு அலுவலர்களை அமைச்சர் தனது அலுவலக பணிகளுடன் சேர்க்கக்கூடாது. அரசு பணியை அரசியல் பணிகளுடன் சேர்க்கக்கூடாது.

* தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களை சென்று சந்திக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். குற்ற வழக்குக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.

* மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து குறிப்புகளும், அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போலப் புகழ்ந்து பேசுவதாக இருந்தால் நீக்கப்படும்.

* அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களை அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக தூண்டும் வகையில் அதுபற்றிய புதிய திட்டங்கள், அறிவிப்புகளை செய்யக்கூடாது.

* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் சமமாக பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிறைவடையும் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய, பிராந்திய மற்றும் மாநில பயன்பாட்டுத் திட்டங்களின் விஷயத்தில், அவற்றின் பயன் பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அது போன்ற திட்டங்களின் செயல்பாடு, அரசு அதிகாரிகளால் செய்யப்படுகிறதா? என்பதும், அரசியல் செயல்பாடுகள் இல்லாமலும், விழாக்களை நடத்தாமலும், திட்டத்தின் செயல்பாடுகளின் பயன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செல்கிறது என்ற எண்ணம் ஏற்படாமலும் செயல்படுத்த வேண்டும். இதில் தேர்தல் கமிஷனை ஆலோசிக்கலாம்.

* அரசினால் பட்ஜெட்டிலோ, கவர்னர் உரையிலோ அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று அவற்றை தொடங்கினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றமாக கருதப்படும். திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணி ஆணை கொடுக்கப் பட்டு இருந்தாலும் அந்தப் பணிகள் தேர்தல் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். பணிகளை முடித்து அதற்கான தொகையை உரியவருக்கு வழங்குவதற்கு தடையில்லை.

* திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்வது கூடாது. மக்கள் நலத்திட் டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும்கூட, தேர்தல் முடியும் வரை அவை நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் முன் அனுமதியின்றி, நலத் திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்கான புதிய நிதியை வெளியிடவோ அல்லது வழங்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யவோ கூடாது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியும் அடங்கும்.

* இயற்கை பேரிடர் நிவாரண நிதி, முதியோர் உதவி நிதி அளிப்பதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று வழங்கலாம். ஆனால் வாக்கா ளர்களுக்கு கட்சி சார்பான தூண்டுதல் ஏற்படாதபடி, அனைத்து ஆடம்பர மான செயல்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com