

சென்னை,
தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பதோடு இனிப்பு களையும் உண்டு மகிழ்வது வழக்கம். பண்டிகை நெருங்கும் நிலையில் பொதுமக்கள் பலகாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். ஆனால் அதற்கு தேவையான பருப்பு உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்து உள்ளது. பருப்பு விலை கிலோ ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இதுதவிர அரிசியின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதேபோல் ஆயுதபூஜை நாளில் சர்க்கரை பொங்கல் வைப்ப தற்கு தேவையான வெல்லம் மற்றும் சுண்டல் அவிப்பதற்கு தேவையான கொண்டைக் கடலையும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, கொண்டைக் கடலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வரத்து குறைவு, பருவநிலை மாற்றம், தேவை அதிகரிப்பு ஆகியவை காரணம் என்று கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், விலைவாசி உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்... அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.