

தூத்துக்குடி,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 11 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 20-ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது. இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அரசுத் துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கச்சாமி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுந்தரம், குலசை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரா திருவிழா முக்கிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் அக்டோபர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பக்தர்களின் வசதிக்காக முக்கிய நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மின் விளக்கு வசதிகளை தடையின்றி செய்து தர, துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.