ஈ.சி.ஆர். சம்பவம் நள்ளிரவில் நடந்தது என்ன? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி

ஈ.சி.ஆர். சம்பவம் நடைபெற்ற பின்பு உடனடியாக காவல் துறையை அழைத்ததும், அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து விசாரித்தனர் என பெண் பேட்டியில் கூறியுள்ளார்.
ஈ.சி.ஆர். சம்பவம் நள்ளிரவில் நடந்தது என்ன? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில் 2-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் ஈ.சி.ஆர். சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர்கள் காரை நிறுத்த சொல்லியும் பெண்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஈ.சி.ஆர். சம்பவத்தின்போது, நடந்த விசயங்களை பற்றி பாதிக்கப்பட்ட பெண் பேட்டி ஒன்றில் இன்று கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாங்கள் அவர்களது காரில் மோதியதாக கூறப்படுவது, பொய்யான குற்றச்சாட்டு. நாங்கள் மது அருந்தவில்லை. குழந்தை மற்றும் குடும்பத்தோடு காரில் பயணித்தோம்.

சம்பவம் நடைபெற்ற பின்பு உடனடியாக காவல் துறையை அழைத்தோம். எங்கள் வீட்டிற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்தனர். சாலையில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களிலும், சம்பவத்தின் முழுமையான காட்சிகள் பதிவாகி உள்ளன என அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், குற்றவாளிகள் பயனபடுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com