கைக்குட்டையால் முகத்தை மூடக்கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி தாக்கு


கைக்குட்டையால் முகத்தை மூடக்கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி தாக்கு
x

அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழட்டி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு புதுடெல்லியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் நடந்து கொண்ட விதம் உதாரணமாக அமைந்துள்ளது. பா.ஜனதா தான் அ.தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார். அப்படி 4 ஆண்டு காலம் ஆட்சியை காப்பாற்றிய பா.ஜனதாவை நாடாளுமன்ற தேர்தலில் கழட்டி விட்டு வேடிக்கை பார்த்தவர்.

தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்கு கைவந்த கலை. இனி அ.தி.மு.க. தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக் கொண்டால் சரி. யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கழட்டி விடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவது எனக்கு ஆட்சி முக்கியமல்ல, பதவி தான் முக்கியம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருப்பது தான் முக்கியம் என்று சொல்லக்கூடியவர்.

அவரால் அ.தி.மு.க. கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது. எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தை கூட காட்ட முடியாமல் கைக்குட்டையால் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை பா.ஜனதாவிடம் அடகு வைத்து விட்டார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நடிகர் விஜய் பிரசார பயணத்தில் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது. அரசு கட்டுப்படுத்த போனால் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுவார்கள். முதல்-அமைச்சர் ரோடு ஷோ செல்லும்போது மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார். சமத்துவ ஆட்சியாக உள்ள தி.மு.க. தான் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story