மீனவர்களின் வாழ்வில் அக்கறை காட்டாத தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடி மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வில் அக்கறை காட்டாத தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on: 

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள், கடந்த 12.10.2026 அன்று மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் சார்பில், மூன்று நாட்களுக்கு பிறகே (15.10.2026), முதல்வர் ஒரு சம்பிரதாயக் கடிதத்தை சாவகாசமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார்.

அந்த ஒரு கடிதத்தை தவிர, எந்த ஒரு அடிப்படை தகவல் பரிமாற்றமோ, அதற்குரிய துறை வாரியான செயல்பாடுகளையோ மீன்வளத்துறையும், ஆட்சியர் அலுவலகமும் இன்று வரை எடுக்க வில்லை என செய்திகள் வருகின்றன. மீனவர்களின் வாக்குகளின் மீது காட்டக்கூடிய முனைப்பை, அவர்களின் வாழ்வில் காட்டாத அக்கறையற்ற இந்த தவெக அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

அந்த பகுதியைச் சார்ந்த அரசு அலுவர்களோ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரோ நேரில் சென்று மீனவர்களின் உறவினர்களை சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மீனவர்கள் எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பரிமாறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி. இதுகுறித்து மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் சென்று கேட்டாலும், மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம் சென்று முறையிட்டாலும் எந்த பதிலையும் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது இன்றைய தவெக அரசு.

இடைத்தேர்தலில் ஓடி ஓடி வாக்கு கேட்ட, மீன்வளத்துறை அமைச்சர், தன் பகுதியைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளாரே? ஏன்? அங்கு ஏதும் இடைத்தேர்தல் வரப்போவதில்லை என்பதாலா? அல்லது வெத்தலை பாக்கு வைத்து அழைத்தால்தான் வருவாரா?

இந்த அரசிடம் நான் அடிப்படையான கேள்வி ஒன்றைக் கேட்கிறேன்- தவெக அரசிடம் காணாமல் போன மீனவர்களின் விவரங்கள் முதலில் இருக்கிறதா? 3 விசைப்படகுகளில், அதாவது அமல் சங்கர் படகில் 8 பேர், நிக்சன் படகில் 9 பேர் மற்றும் ஆரோன் படகில் 9 பேர் கடலுக்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படை விவரமாவது இந்த அரசுக்கு தெரியுமா? காணாமல் போயுள்ள மீனவர்கள் யாரென்று தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்- என்னிடம் உள்ள விவரங்களை நான் அளிக்கிறேன்.

அதிமுக ஆட்சி இருந்தபோது மீனவர்களை அரணாகக் காத்து நின்றது அம்மாவின் அரசு. மீனவர்களுக்கு ஒன்றெனில், உடனடியாக களத்தில் நிற்பதை உறுதி செய்தோம். மத்திய அரசுடன் உடனடியாக பேசி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம். இது தான் அக்கறை உள்ள அரசின் செயல்பாடு.

சுறா படத்தில் வருவது போல் கடலுக்கு நடுவே நீச்சல் அடித்து உங்களை யாரும் மீனவர்களை காப்பாற்றச் சொல்லவில்லை; குறைந்தபட்சமாக ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று தான் அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள். மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அவர்களின் உறவினர்களை மாநில அரசின் சார்பில் அரசு அலுவலர்களை, சட்டமன்ற உறுப்பினரை, துறை அமைச்சரை குறைந்தபட்ச அக்கறையோடு அனுப்பி வைத்து அவர்களுக்கான உரிய தகவல் பரிமாற்றத்தை அளிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com