எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: தி.மு.க. கூட்டணி உடையாது - அமைச்சர் ரகுபதி பேட்டி

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சருக்கு சவால் விடுவது பற்றி கேட்கிறீர்கள். அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடையாது. நடிகர் விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரை பற்றிய கேள்விகளை தவிர்த்து விடுங்கள். நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் எந்த கட்சியையும் அபகரிக்க முயலவில்லை. அவர்கள் சுதந்திரமாக பேசவும், செயல்படவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் இடம்கொடுத்து, அவர்களுக்கு கருத்துகளை சுதந்திரமாக கூற வாய்ப்புகளை தந்துள்ளோம்.
யாரையும் அபகரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. பா.ஜ.க. வேண்டுமானால் எந்த கட்சியை கபளீகரம் செய்யலாம் என்று நினைக்கலாம்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி உடையும் என எடப்பாடி பழனிசாமி கூறியதை பற்றி கேட்கிறீர்கள். கூட்டணி உடையாது, அவர் பகல் கனவு காண்கிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகி விட்டது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். தேர்தலை கண்டு நாங்கள் பயப்பட தேவையில்லை.
தமிழக மாணவர்கள் இருமொழி கல்வி கொள்கையை தான் விரும்புகிறார்கள். யார் வேண்டுமானாலும் 3-வது மொழியை கற்றுக்கொள்ளலாம். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்றைக்கு உலக அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர். மத்திய அரசு 3-வது மொழியாக இந்தியை திணிக்கிறார்கள். திணிக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.






