

சென்னை,
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிஸி ஆனந்தாக செயல்பட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நினைத்தது துரோகம். நல்ல தலைமையை ஏற்று தவெகவில் இணைகின்றனர். தவெகவுக்கு வந்தவர்களை வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் வைத்திருந்தது இயக்கம். அம்மா வைத்திருந்தது இயக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது கம்பெனி; கார்பரேட் கம்பெனி. 10 பேர் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள். புரட்சி தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் வைத்தவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்ற சதிகாரர்கள் இருக்கிறார்களே... அதை தகர்த்தெறிய வேண்டுமா இல்லையா?.
தகர்த்தெறியும் சக்தியாகத்தான் இங்கே இவர்கள் இணைந்திருக்கிறார்கள். தவெகவிற்கு வந்துள்ளவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள். துரோகம் இங்கே இல்லை. அங்கேதான் இருக்கிறது. அதை இவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். வயதானவர்களை வைத்துக் கொண்டு நேற்று மகளிரணி கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள். தவெக அரசு தடுமாறுமா என நரி போல் சிலர் காத்திருக்கின்றனர்; தவெக அரசை காக்கும் சக்திகளாக அதிமுகவினர் தற்போது இணைய வந்துள்ளனர்; திமுகவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ஆகும் இபிஎஸ் கனவை தகர்த்துள்ளனர்.
அரசியலில் நான் தூக்கி எறியப்பட்ட நேரத்தில், என்னை தாங்கி பிடித்து வருவாய் துறை அமைச்சராக ஆக்கிய வரலாறு, இந்திய துணை கண்ட வரலாற்றில் நம் தலைவரை (விஜய்) தவிர வேறு யாருக்கும் இல்லை. நான் இன்றும் ஜெயலலிதா படத்தை தான் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன். ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைக்க முதல்-அமைச்சர் விஜய் அனுமதித்துள்ளார். நம்பி வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.