

சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"கவர்னர் ஆற்றிய உரையில் மாற்றம் எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவெக அரசின் முதல் கவர்னர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இருந்ததுதான் கவர்னர் உரையிலும் இருந்தது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளும், 130 கொலைகளும் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது? பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
எனது மகன் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன. எனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறுவது தவறு. அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். கட்சி பதவிகளில் இல்லை. எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.