

சென்னை,
எடப்பாடி பழனிசாமியின் மதுராந்தகம் பிரசாரத்திற்கு 2 நாள் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 24.9.2026, 26.9.2026 ஆகிய தேதிகளில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
இதன்படி, செப்டம்பர் 24-ந்தேதி மாமண்டூரில் பிற்பகல் 3 மணிக்கும், பூதூரில் மாலை 4.30 மணிக்கும், தேவத்தூரில் மாலை 6 மணிக்கும், சரவம்பாக்கத்தில் இரவு 7 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
அதேபோல், செப்டம்பர் 26-ந்தேதி எல். எண்டத்தூரில் பிற்பகல் 3 மணிக்கும், ராமாபுரத்தில் மாலை 4.30 மணிக்கும், எலப்பாக்கத்தில் மாலை 6 மணிக்கும், ஒரத்தியில் இரவு 7 மணிக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.