

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவருடைய மனைவி சாந்தி (வயது 40). இவர்களுடைய மகன் சந்தீப்குமார் (16)-மகள் யாழினி (12). பாண்டியராஜ் இறந்துவிட்ட நிலையில், சாந்தி கோபாலபுரத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் சாந்தி, உறவினர் ஸ்ரீதேவி (45), மகன் சந்தீப்குமார், மகள் யாழினி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில் சாந்தி, ஸ்ரீதேவி ஆகியோர் கதவை சிறிது திறந்து வைத்துவிட்டு வாசலின் அருகே தூங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை 3 மணி அளவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சாந்தி, ஸ்ரீதேவி மீது அங்கு வந்த மர்ம நபர், பெட்ரோலை ஊற்றினார். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அந்த நபர் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் சாந்தி, ஸ்ரீதேவி ஆகிய 2 பேர் மீதும் தீப்பிடித்து மளம ளவென பரவியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த சந்தீப் குமார், அவர்களை வீட்டிற்குள் இருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்து தீயை அணைத்தான். பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரும், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தூங்கிக்கொண்டிருந்த பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்த முத்து (60) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.