பெண் தூய்மை பணியாளரை சுத்தியலால் அடித்துக்கொன்ற முதியவர்: கள்ளத்தொடர்பை முறித்ததால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கரலப்பாக்கம் பகுதியில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முனிவேல், கொலை செய்யப்பட்ட லதா
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் பெண் தூய்மை பணியாளர் பிணமாக கிடந்த வழக்கில், கள்ளத்தொடர்பை முறித்ததால் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் தூய்மை பணியாளர் பிணமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கரலப்பாக்கம் யாதவர் தெருவை சேர்ந்த லதா (வயது 45), கரலப்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 22-ந்தேதி லதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, லதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

முதியவர் கைது

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முனிவேல்(65) என்பவர் லதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லதாவுக்கும், முனிவேலுக்கும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ந்தேதி லதா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, முனிவேலும் அங்கு சென்றார். அப்போது, வயதாகிவிட்டதால் இனிமேல் தன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என லதா கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சுத்தியலால் அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த முனிவேல், லதாவை தாக்க முயன்றபோது அவர் முனிவேலை தள்ளிவிட்டதாக தெரிகிறது. பின்னர் லதா தரையில் தலையணை வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் அறை அருகே கிடந்த இரும்பு சுத்தியலை எடுத்த முனிவேல், அவரது தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லதா, சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு முனிவேல் தப்பிச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கைதான முனிவேலை சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com